உயிர் உரங்களை பக்டீரியா உரங்கள், பூஞ்சண உரங்கள், மற்றும் பொதுவான இயற்கை உரங்கள் என வகைப்படுத்தலாம். (ஹியூமிக் உயிர் உரங்களும் உண்டு. ஆயினும் இவற்றை நாம் இந்தப் பதிவில் உட்படுத்தவில்லை. )பக்டீரியா உரங்களில் அசற்றோபக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ரைசோபியம் போன்றவையும்,பூஞ்சண உரங்களில் ட்ரைகடேர்மா விரிடி, மெட்டாரைசியம், பெவெரியா, வேர்ட்டிசீலியம் போன்றவையும் அடங்கும்.
கொம்போஸ், மண்புழு உரங்கள் போன்றன பொதுவான இயற்கை உரங்கள் எனும் வகைக்குள் அடங்கும்.இயற்கை உரங்களுடன் ஒப்பிடுகையில்,பக்டீரியா உரங்கள், பூஞ்சண உரங்கள் ஆகியவற்றில் ஒரே வகை அல்லது ஒத்த இயல்புள்ள சில நுண்ணுயிர் வகைகள் மிகவும் அதிக செறிவாக காணப்படும்.
பொதுவாக சகல வகை நுண்ணுயிர் உரங்களும் இயற்கை உரங்களான கொம்போஸ், மண்புழு உரங்களுடன் சேர்ந்து தொழிற்படும்.அதேபோல் பொதுவாக பக்டீரியா உர வகைகள் பூஞ்சண உரவகைகளுடன் அதே வினைத்திறனுடன் சேர்ந்து தொழிற்படும்.
உதாரணமாக பக்டீரியா உரமான சூடோமோனஸ், பூஞ்சண உரமான மெட்டாரைசியத்துடன் சேர்ந்து வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்தும். ஆயினும் ஒரே வகை பக்டீரியா உர வகைகளையோ அல்லது பூஞ்சண உரவகைகளையோ ஒரே சமயத்தில் கலந்து பயன்படுத்துவதை பெரும்பாலும் நாம் தவிர்த்தல் நன்று.
பின்வரும் உதாரணம் மூலம் இதனை விளங்கிக்கொள்ளலாம். பூஞ்சண உரங்களில் ட்ரைகடேர்மா விரிடி மிகவும் வினைத்திறனானது மற்றும் வேறு பூஞ்சணங்களை வளரவிடாது அழிக்கும் தன்மையுள்ளது. இதனுடன் மெட்டாரைசியம், பெவெரியா, வேர்ட்டிசீலியம் போன்ற நன்மைசெய்யும் பூஞ்சணங்களைக் கலக்கும் போது பல சமயங்களில் அவற்றையும் ட்ரைகடேர்மா அழிக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் வீரியமான ஒரு உயிர்உரமானது, வீரியம் குறைந்த மற்ற ஒரு உயிர் உரத்தினை கட்டுப்படுத்துவதால் எமக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவது மட்டுமன்றி பண விரயமும் ஏற்படுகிறது.
ஆகவே நாம் உயிர் உரங்களை பயன்படுத்தும் போது ஒரே வகை பக்டீரியா உர வகைகளையோ அல்லது பூஞ்சண உரவகைகளையோ ஒரே சமயத்தில் கலந்து பயன்படுத்துவதை பொதுவாகத் தவிர்த்தல் நன்று.அல்லது மிக அவசியமான சந்தர்ப்பங்களில் ஓர் துறைசார் நிபுணரின் ஆலோசனையுடன் இதனை செய்யலாம்.ஒவ்வொரு வகை உயிர் உரங்களின் தெளிப்புக்கும் இடையில் ஓர் அட்டவணைப்படி குறைந்தது 5 நாட்கள் இடைவெளியில் கொடுத்தல் நன்று.
Source CSJ Agri