முன்னொரு காலத்தில் பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர போகிறீர்கள் என்று கேட்டால் நான் வைத்தியர், எஞ்சினியர், ஆசிரியர் என்றவாறு தான் கூறுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்கள் பலர் நான் தொழில்முயற்சியாளராக வரவேண்டும், சிறந்த வியாபார முதலீட்டாளராக வரவேண்டும் என்று கூறத்தொடங்கிவிட்டனர். இந்த தொழில்முயற்சியாளர்கள் என்றால் யார்? அவர்களிற்கு கிடைக்கும் நன்மைகள் அதனோடு சமூகம் பெறப்போகும் நன்மைகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து படியுங்கள்.
தொழில்முயற்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினைகளை அல்லது தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை புத்தாக்க முறையில் வழங்குவதன் ஊடாக தனக்கான ஒரு வருமானத்தினை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது அதனை விரிவுபடுத்தி கொள்வதுடன் இன்னும் பலரையும் இணைந்து ஒரு இலக்கினை நோக்கி தனது செயற்பாட்டினை முன்னெடுத்து செல்லும் ஒரு வியாபார பொறிமுறையினை நாம் தொழில்முயற்சியாண்மை என கருதலாம்.
தொழில் முயற்சியாளர்கள் எப்போதும் ஒரு குறிக்கோளுடனும் கனவுகளுடனும் பயணிப்பவர்களே, எனவே அதிகளவான சவால்களையும், நிராகரிப்புக்களையும் தாண்டித்தான் அவர்களின் சாதனைகள் நிலைநாட்டப்படும். தொழில் முயற்சியாளர் என்னும் சொல்லில் காணப்படுவது போல் தோல்விகளை சவால்களாக ஏற்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்பவர்கள் தான் தொழில் முயற்சியாளர்கள்.
நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு, பல சவால்களையும், ஏளனம்களையும், நிராகரிப்புக்களையும் கடந்து, பல தோல்விகளை சந்தித்து, நேரத்தினை அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி, பல விட்டுக்கொடுப்புக்களை, தியாகங்களை செய்து, தன்னம்பிக்கையினையும் நேர்மறை சிந்தனையினை தங்கள் பாதுகாப்பு வளையமாக அணிந்துகொண்டு, கடுமையான பாதையில் பயணிக்கக் கூடிய தொழில்ப்பாதையே இந்த தொழில் முயற்சியாண்மை.
இதனால் தான் என்னவோ உலகில் உள்ள மக்களில் 90% அதிகமானோர் தொழிலாளர்களாகவே இருந்து விட்டு செல்கின்றனர். காரணம் சவால்கள், தோல்விகள், ஏளனங்கள் காணப்படாது, வேலைசெய்யும் நேரத்திற்கான ஊதியம் நிச்சயமாக கிடைக்கும். எனவே இதனை ஒரு பாதுகாப்பு வளையமாகவே கொண்டு தங்கள் வாழ்க்கையினையும், வருமானத்தினையும் ஒரு வட்டத்தினுள் சுருக்கிக்கொண்டு வாழ்ந்துவருபவர்கள் இவர்கள் அனைவரும் சேவையாளர்கள் அல்லது தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.
சவால்களை தாண்டி பெற்றிபெற்ற தொழில்முயற்சியாளர்களிற்கு கிடைப்பது என்ன என பார்க்கும் போது, எல்லையற்ற வருமானம் என்பது அவர் தொழில் செய்யும் போது மட்டுமல்ல ஓய்வு எடுக்கும் போதும் கிடைக்கும், இறந்தபின்னும் கிடைக்கும், அத்தோடு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடுதல், இதன் மூலம் சமூகத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பாளராக மாறுவதுடன் தனக்கும் தனக்குபின்னரா தலைமுறையினரும் வாழ்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தும் ஒரு சாதனையாளர். இவ்வாறான பல்வேறு எல்லையற்ற வாழ்வினை வாழமுடியும்.
எனவே தற்போது இந்த இளைஞர்கள் தொழில்முயற்சியாண்மை என்ற விடயத்தில் கூடிய கவனத்தினை எடுப்பது எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும், அவர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கும் மிகவும் பயனுடையதாகும். ஆனாலும் ஒரு தொழில் முயற்சியாளனாக வருவதற்கு எவ்வகையான பண்புகளை கொண்டிருக்க வேண்டும், தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்ற விபரங்களை அடுத்த தொகுப்பில் எதிர்பாருங்கள்.
க.பிரதீஸ்வரன்