ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பிரிவின் பேராசிரியர் திலிப் டி சில்வா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் பேராசிரியர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான சிறுவர்கள் வாய் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துவது குறைவதாகவும், எனவே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல் வைத்தியர்களை உருவாக்கும் ஒரே இடம் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடம் எனவும், தற்போது பல் வைத்திய பீடத்தினால் உருவாக்கப்படும் பல் வைத்தியர்களே இலங்கையில் அதிகளவில் பணிபுரிவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு வைத்தியரை உருவாக்குவதை விட ஒரு பல் வைத்தியரை உருவாக்க அதிக பணம் செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே புரிந்து கொண்டால், அவர்கள் வளரும்போது அது முக்கியம் என்றும் தெரிந்து செயற்பட முடியும் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் முன்பள்ளி ஆசியரியர்கள் விசேட கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.