நெல் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உயர் அதிகாரிகளுக்கிடையில் நேற்றைய தினம் (03.10.2024) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், உரங்களை கொள்வனவு செய்யும் போது ‘QR’ குறியீட்டு முறையை தயார் செய்யுமாறும் விவசாயிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் எனவும் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் பயிரிடப்படும் 8 லட்சம் ஹெக்டேர்களுக்கு உரம் வழங்க அரசுக்கு 20 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படும்.
இந்நிலையில், விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது நிறுத்தப்பட்ட மானியங்களை மீண்டும் வழங்குவதற்கு எவ்வித தடையுமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிதாக மானியம் வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.