1908 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் ஆறாம் நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூராம் திருப்பழுகாம பதியில் முருகப்பர் வள்ளியம்மைக்கு எம் கண்டுமணி ஆசான் பிறந்தார்.
கிருஷ்ணப்பிள்ளை எனப் பெயரிடப்பட்டு கணபதிப்பிள்ளை வட்டவிதானை வேலுப்பிள்ளை வட்டவிதானை மற்றும் கண்ணம்மை ஆகிய மூவருக்கும் இளையவராய் பழுகாமத்தில் வளர்ந்து வந்தார்.
இவர் திருப்பழுகாமம் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
உயர்கல்விக்காக மட்டக்களப்பிலுள்ள கத்தோலிக்க மிஷன் பாடசாலையான மட்/ புனித மரியம்மாள் பாடசாலையில் இணைந்து சிறப்புற உயர்கல்வியை முடித்தார்.
பலர் தங்களது கல்வியை இடைநிறுத்தி கொண்டாலும் மட்டக்களப்பு – மட் / அருற்திராஸ் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயின்று ஆசிரியர் என்ற புனித பட்டம் பெற்றார்.
தான் படித்த புனித மரியம்மாள் பாடசாலையிலேயே தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார்.
பின்னர் பழுகாமம், கொக்கட்டிசோலை, மண்டூர், மொறக்கட்டான் சேனை, லுணுகலை, ஆரையம்பதி, காரைதீவு, கல்முனை ஆகிய இடங்களிலுள்ள ராமகிருஷ்ணமிஷன் பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றினார்.
இவ்வாறு இருக்க போரதீவுப்பற்றுப் பகுதிக்கான கிராமச்சங்கத்தின் தலைவர் எனும் நியமனம் கண்டுமணி ஆசானுக்கு கிடைக்கப் பெற்றது.
பாடசாலை சேவைகள், போக்குவரத்து சேவைகள், கிராம அபிவிருத்தி பணிகள், ஊரிலுள்ள வீதிகளை புனரமைத்தல் என சகல சேவைகளையும் முன்னின்று செவ்வனே செய்து முடித்தார்.
அதுமட்டுமின்றி, அன்றைய உள்ளூர் மக்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை.
எனவே ஒரு மருத்துவர் வாரத்திற்கு இரண்டு முறையாவது வந்து மருத்துவப் பணிகளை மேற்கொள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை இலவசமாக வழங்கினார்.
“மு.கிருஷ்ணப்பிள்ளை- கண்டுமணி ஆசான்“
என்ற பெயர் சிறக்க
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆங்கோரேழைக் கெழுத்தறிவித்தல்“
என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி பல இளைஞர்களையும், அடுப்பங்கரையில் ஒதுங்கிய இளம்பெண்களையும் மீண்டும் பட்டதாரிகளாக பாடசாலை வாயிலை மிதிக்க வைத்து பல்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக மிளிரச் செய்தார்.
தனது இந்த கல்விச் சேவை பழுகாமபதியோடு நின்று விட கூடாதென்று பெரியபோரதீவு, முனைத்தீவு, கோவிற்போரதீவு, வெல்லாவெளி, அம்பிளாந்துறை என்று பல கிராமங்களிலும் தனது சேவையை ஆற்றியிருந்தார்.
வடக்கு நிலத்திற்கு ஒரு நல்லைநகர் ஆறுமுக நாவலர், கிழக்கு நிலத்தின் மீன் பாடும் தேனாட்டிற்கு தவத்திரு விபுலானந்தர் போலும் திருப்பழுகாம நல்லூருக்கு எம் கண்டுமணி ஆசான் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆட்சி அஸ்தமித்ததும் தன் கனவுகளை நனவாக்க முதற்படியான சைவப்பாடசாலை ஒன்றை நிறுவ ஆவலும் ஆர்வமும் கொண்டு செயற்பட்டார்.
உடனே தமது ஆத்ம குருவான தவத்திரு விபுலானந்த அடிகளாரைத் தொடர்பு கொண்டார்.
அடிகளாரின் முயற்சியால் இராமகிருஷ்ண மிஷன் அனுசரணையுடன் திரௌபதியம்மன் ஆலயத்தின் அருகாமையில் சைவ கனிஷ்ட பாடசாலை இயங்கும் வாய்ப்பு திருப்பழுகாமத்திற்கு கிட்டியது.
அது மாத்திரமன்றி பழுகாமம் மகாவித்தியாலயம் எமது மாணவர்களுக்குக் கிடைக்கக் காரணமும் அவர்தான்.
அதனால்தான் இன்றுவரை கண்டுமணி மகா வித்தியாலயம் பல நல்ல மாணவர்களையும் பல நல்ல உயர் மானிடர்களையும் வளர்த்துள்ளது.
உலகில் மறைந்தாலும் உணர்வில் வாழும் இப்படிப்பட்ட ஒரு கல்விமானை பற்றி எமது பக்கத்தில் பிரசுரிப்பதையிட்டு நாங்கள் பெருமைகொள்கின்றோம்.