நைதரசன் பதிக்கும் உயிர் உரமான அசற்றோபக்டர் பொதுவாக உயிர் உரங்கள் நைதரசனை வேர்முடிச்சுடன் இணைத்தல் , பொஸ்பரஸ் சத்தைக் கரைத்தல் (solubilizing), ஆகிய இயற்கை முறைகள் மூலம் தாவரத்துக்கு சத்துக்களைச் சேர்க்கும், மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பதார்த்தங்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டும்.
இரசாயன உரங்களின் பயன்பாட்டை, முறையான இடுபொருட்களுடன் கொடுக்கப்படும் உயிர்உரங்கள் கணிசமாக குறைக்குமென்பது உறுதி.
கருப்பு யூரியா என்று அழைக்கப்படும் உயிர் உரமான இது நெல், சோளம், கரும்பு, சிறுதானியங்கள், காய்கறி, இலைக்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அசற்றோபக்டர் நுண்ணுயிர்கள் வேர் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும்.
இந்த நுண்ணுயிரி உற்பத்தி செய்யக் கூடிய ஒருவித பசையானது போசணை மூலகங்கள் நீரில் கழுவிச்செல்வதை தடுக்க உதவுகிறது.
சில தசாப்தங்கள் முன் பிரேசில் நாட்டில் கரும்புச் செய்கையில் ஒரு ஹெக்டேயரில் 1/3 அதிகமாக விளைச்சல் எடுத்துள்ளார்கள். சாதாரணமாக 60 தொன் விளைச்சல் கிடைத்து வந்த நிலங்களில் 80 தொன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் `அசற்றோபக்டர்’ (Acetobacter) என்ற நுண்ணுயிரியிலிருந்து கிடைக்கும் உயிர் உரம்தான் என்ற செய்தி, பிரேசில் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தபின்னரே இவற்றை பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட்டது.
பொதுவாக உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில்தான் வாழும். ஆனால், கறுப்பு யூரியா எனப்படும் அசற்றோபக்டர் கரும்புத் தாவரத்தின் உள்ளே சுக்குரோஸ் சத்திலும், அமிலத் தன்மையிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. கரும்புக்குள்ளே இருந்துகொண்டு காற்றில் உள்ள நைதரசனை எடுத்துப் பயிருக்குக் கொடுக்கும்.
அசற்றோபக்டரை கரும்புக்கு மட்டுமல்லாமல், நெல், கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் சேதன உரத்துடன் பயன்படுத்தலாம். இதனால், ரசாயன உரச்செலவு மிச்சமாகும். இதனைப் பயன்படுத்தும்போது, அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பரிந்துரைப்படி ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 6 கிலோ அசற்றோபக்டரை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்து பயன்படுத்தலாம்.
இலங்கையில் உள்ள கரும்புத் தோட்ட பெருநிறுவனம் ஒன்றில் 2016 – 17 ஆம் ஆண்டுகளில் இவை பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு இரசாயன உரப்பாவனை குறைக்கப்பட்டது.
இதேபோல் அதே ஆண்டுகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதிகளில் சிறுபோக நெற்செய்கையிலும் இவரினால் அசற்றோபக்டர் பயன்படுத்தி இரசாயன உரப்பாவனை குறைக்கப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, மல்வத்தை, சம்மாந்துறை, மகாஓயா பகுதி விவசாயிகள், உயிர் உரங்களை, இரசாயன உரங்களுடன் கலந்து (இரசாயனப் பாவனையை குறைத்து) பயன்படுத்தி அதிக நெல் விளைச்சல் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
Source : CSJ Agri