இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 17 விவசாயம்

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி? : தொடர் 17

🔄 Updated:
1 min read
💬 0

இலங்கையில் இயற்கை விவசாயத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு முறைகள் நடைமுறையில் உள்ளன. அதில் நெற் செய்கை முறைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக, சிறியளவு நெற் செய்கையில் வீசி எறிந்து விதைக்கும் முறை பல விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறை பொதுவாக மணல் பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். விதைப்பதற்கு முன், ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி அளவில் சூடோமோனஸ் பூஞ்சண கொல்லியை தேவையான அளவு நீருடன் கலந்து, சுத்திகரிக்கப்பட்ட விதை நெல்லை 3 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் முளைக்கட்டவிட்டு வயலில் விதைக்கலாம். விதைகளை எறியும் போது அடர்த்தியாக அல்லாமல் ஐதாக எறிந்து, பின்னர் உழுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். இது நோய் தாக்கங்களை குறைக்க உதவும். எனினும், இம்முறையில் நடுகை முறையை ஒப்பிடுகையில் விளைச்சல் குறைவாக இருக்கும்.

மற்றொரு முறையாக, நாற்று மேடையில் பதியம் இட்டு 14 நாட்களில் கைகளால் பிடுங்கி வரிசையில் நடுதல் நடைமுறையில் உள்ளது. இதில் சேற்று வயலின் ஒரு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட நெல்லை பதியம் போட்டு, கொம்போஸ் அல்லது மண்புழு உரம் சேர்த்து வளர்க்கப்படுகிறது. இதனுடன், ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி அளவில் சூடோமோனஸ் அல்லது ட்ரைக்கடெர்மா விரிடி பூஞ்சண கொல்லி தெளிக்கப்படுகிறது. புழு தாக்கம் ஏற்பட்டால் பேவேரியா பேசியானா அதே அளவில் பயன்படுத்தப்படுகிறது. 14 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி, 1 அடி அல்லது ஒன்றரை அடி இடைவெளியில் கைகளால் நடுவர். நடும் போது நாற்று கட்டுகளின் நுனியை கிள்ளி அகற்றி நடுவது வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

இம்முறையில் இடைவெளியை அளந்து நூல் கட்டி சரியான வரிசையில் நடுவது, கோனோ வீடர் மூலம் களை கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது. மேலும் நோய் தாக்கமும் குறைவாக இருக்கும். இந்த முறையில் விளைச்சல், எறிந்து விதைக்கும் முறையை விட அதிகமாகக் காணப்படும்.

அதேபோல், இயந்திர விதைப்பு முறையும் மிகவும் வினைத்திறனானதாகும். வயலை பண்படுத்தும் போது சேற்றின் பதம் சரியாக இருக்க வேண்டும். அதாவது, காலால் மிதித்த போது உருவாகும் தடம் மெதுவாக மூடப்பட வேண்டும். நாற்று தயாரிப்பதற்காக, சிறப்பு தட்டுகளில் கொம்போஸ் அல்லது மண்புழு உரம் கலந்த சேற்று மண்ணுடன் சூடோமோனஸ் அல்லது ட்ரைக்கடெர்மா விரிடி பூஞ்சண கொல்லி சேர்க்கப்படுகிறது. மேலாக கொம்போஸ் மற்றும் கருக்கிய உமி சேர்க்கப்படுகிறது.

புழு தாக்கம் இருந்தால் பேவேரியா பேசியானா ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி அளவில் பயன்படுத்தப்படுகிறது. 14 நாட்களில் நாற்றின் நுனி வெட்டப்பட்டு தூண்டல் அளிக்கப்பட்ட பின்னர், இயந்திரத்தின் மூலம் நடுகை செய்யப்படுகிறது. இம்முறையில் 9 மில்லி மீட்டர் முதல் தேவைக்கேற்ப இடைவெளி வைக்கலாம். இது இயற்கை விவசாயிகளுக்கு மிகவும் பொருத்தமான முறையாகும். களை கட்டுப்பாடு எளிதாகவும், நோய் தாக்கம் குறைவாகவும் இருக்கும். மேலும், விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும்.

நெற் செய்கை காலத்தில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை திரவ வடிவில் பசளை மற்றும் கரைசல்கள் வழங்குவது நல்ல பலனை தரும். அதேபோல், ஈ.எம் (EM) எனப்படும் திறன் மிகு நுண்ணுயிர் கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை செய்கை ஆரம்பிக்கும் முன்பே தயாரித்து வைத்திருப்பது அவசியமாகும்.

E.M 1 (Mother Culture – தாய் திரவம்) என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இதில் அசோஸ்பைரில்லம், அசோட்டோபாக்டர், அசிட்டோபாக்டர், ட்ரைகோடர்மா, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர்களுடன் லாக்டிக் அமில பாக்டீரியா, ஈஸ்ட், ஒளிச்சேர்க்கை பாக்டீரியா, ரே பூஞ்சணம், அக்டினோமைசிட்ஸ் போன்ற பல்வேறு நுண்ணுயிர்களும் அடங்கியுள்ளன.

ஆகையால், E.M 1 ஐ நேரடியாக பயன்படுத்தாமல், செயல்திறன் கொண்ட இரண்டாம் நிலையான E.M 2 ஆக மாற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்…)
CSJ Agri
20/02/2026

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.