65 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு

65 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டி உட்பட பல பிரதேசங்களுக்கு 65 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (27.09.2024) நள்ளிரவு முதல் நீரை வெளியேற்ற மகாவலி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சனிக்கிழமை(28.09.2024) அதிகாலை 1 மணி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணிநேர நீர்வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபை, ஹாஸ்பத்து, புஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை நீர் விநியோக அமைப்புக்கள், குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராஜவெல்ல, சிறிமல்வத்தை, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வளல ஆகிய பகுதிகளுக்கும், வளல இருந்து நீர் விநியோகிக்கும் மாவத்தை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
வரட்சியான காலநிலை காரணமாகவும், ரஜரட்ட பிரதேசத்தில் விவசாய பணிகள் இந்த நாட்களில் முடிவடைந்ததாலும், இந்த நாட்களில் நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ள நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படவுள்ளது.

மேலும் நீர்த்தேக்கம் வெற்றிடமாக உள்ளதால், மகாவலி ஆற்றில் விளையாடுவதற்கோ மீன்பிடிப்பதற்கோ செல்வதை தவிர்க்குமாறு பிரதேசவாசிகளை மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.