மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மார்பக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை

மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று (10.10.2024) நடைபெற்ற மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,  “ஒவ்வொரு சுகாதார உத்தியோகஸ்தர்களும் ஒவ்வொரு சுகாதார தூதுவர்களாக விளங்கி அவர்கள் பணிபுரிகின்ற அனைத்து அலுவலகங்களிலும் மக்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், உத்தியோகஸ்தர்கள் குடும்பங்களிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அதுவே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். தற்போது மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனை நாங்கள் விழிப்புணர்வு வழங்குவது மாத்திரமில்லாமல் முதற்கட்டமாக பெண்கள் சுய மார்பு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் 20 வயதில் இருந்தும், பின்னர் 35 வயதில் இருந்து பரிசோதனைகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக பொது சுகாதார மாதுக்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். 

35 வயதிலிருந்து பெண்களுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பெல் மூமண்ட் கிளினிக் எனப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது, 3 வருடத்திற்கு ஒரு தடவை ஏனும், இந்த பரிசோதனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கு மேலாக உடலில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுமிடத்து, மார்பகங்களில் அல்லது உடலில் வேறு ஏதும் இடங்களிலும் சிறு கட்டிகள் உருவாகும் என சந்தேகப்பட்டால், மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் இயங்கிவரும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிகின்ற ஒரு சுகாதார சேவை நிலையத்திற்குச் சென்று பரிசோதனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.