எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அரச துறை அதிகாரிகளுக்கான விதிமுறைகளின் அத்தியாயம் 12இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல குறைந்தது 4 மணிநேரம் தொடர்ந்து வழங்கப்படக்கூடிய விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணைக்குழு ஒரு முறையை உருவாக்கியுள்ளது.
வாக்களிப்பு நிலையம் வேலை இடத்திலிருந்து 40 கிலோமீற்றருக்குள் இருந்தால் அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். தூரம் 40 முதல் 100 கிலோமீற்றருக்குள் இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
தூரம் 100 முதல் 150 கிலோமீற்றருக்கு இடையில் இருந்தால் ஒன்றரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும், 150 கிலோமீற்றருக்கு மேல் தூரம் இருந்தால் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும். இருப்பினும், ஊழியர்கள் உரிய விடுமுறை கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக நிறுவனத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விசேட விடுமுறைக்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அந்த விடுப்புக் காலத்தைக் குறிக்கும் ஆவணங்களை நிறுவனங்களில் காட்சிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணியிடங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.