கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நெல் வயல்களில் ஏற்பட்ட கபிலத்தத்தி (அறக்கொட்டி) தாக்கமானது, கொழும்பில் உள்ள ஓர் ஆராய்ச்சி ஆய்வுகூடத்தில் இருந்து பெறப்பட்ட பேவேரியா பேசியனா எனப்படும் ஓர் நுண்ணுயிர் உரம் மூலம் 100% நஞ்சற்ற முறையில் 3 பிரயோகங்களில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
பெவேரியா பேசியானா எனப்படும் வெண்நிறப் பூஞ்சணம், ஓர் நஞ்சற்ற உயிரி பூச்சிக் கொல்லியாக, விவசாயத்தில் முன்னேற்றமடைந்த பல நாடுகளில் (இலங்கை தவிர) அங்கீகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றால் கட்டுப்படுத்தும் பீடைகள்:
பொதுவாக சகல துளைக்கும் வண்டுகள், புழுக்கள் மற்றும் குத்தி உறிஞ்சும் பூச்சிகள் குறிப்பாக நெல், இலை சுருட்டுப்புழு, வெட்டுக்கிளி, கபிலத்தத்தி மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும்.
மலர் செடிகளில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு
கரும்பு தண்டுத் துளைப்பான்கள்
தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும்.
கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மாமரத்தில் தோன்றும் கபிலத் தத்தி மற்றும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
பெவேரியா பேசியானா நுண்ணுயிரானது, பயிர்களின் இலையை உண்ணும் புழுக்களுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகிறது. இதை ஏக்கருக்கு இரண்டு லீட்டர் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பதினான்கு நாள்களுக்கு ஒருமுறை அல்லது தாக்குதல் வீரியம் அதிகமாயின் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
16 லீட்டர் தாங்கிக்கு 350 மில்லி எனும் அளவில் இதனைக் கலந்து, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின், வண்டுகளின், புழுக்களின் மேல் நேரடியாக தெளிக்கப்பட்டு, மூன்று தொடக்கம் ஆறு நாள்களில் (சூழல் வெப்பநிலையைப் பொறுத்து ) White Mascardin Disease எனும் நோயை உருவாக்கி, இயங்க முடியா நிலைக்கு அவைகளை இட்டுச்சென்று அழிக்கும். இவற்றால் தாக்கி அழிக்கப்பட்ட பூச்சிகள், வண்டுகளை நுணுக்குக்காட்டியூடு பார்க்கும்போது அவை வெண்மையாக ஒளிரும்.
இலங்கையில் தனிப்பட்ட முறையில் இதனைப் பயன்படுத்திப் பயனடைந்த பயனர்களின் அனுபவங்களின் தொகுப்பு.
நெல் வயலில் பேவேரியா
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் உள்ள சில இயற்கை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக நெல் வயலில் கபிலத்தத்திகளை கட்டுப்படுத்த இதனை இரண்டு அல்லது மூன்று தடவை விசிற, பீடைகள் கட்டுப்பட்டதாக அனுபவத்தினை பகிர்ந்துக்கொண்டனர்.
அதேபோல் மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறையில் உள்ள சில இயற்கை விவசாயிகளும் தமது நெல் வயல்களில், இதனைப் பயன்படுத்தி கபிலத்தத்தி (அறக்கொட்டி)யினை அண்மைக்காலங்களில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளனர்.
சோளன் செய்கையில் பேவேரியா
மகா ஓயா, பதியதலாவ மற்றும் மகியங்கனை பகுதியில் அமைந்துள்ள சோளம் தோட்டங்களில் தனிப்பட்டபரீட்சார்த்த ரீதியாக இவை தனித்தனியாக செடிகளின் குருத்தினூடாக சிரின்ஜ் மூலம் செலுத்திய போது படைப்புழுவிற்கு எதிரான நல்ல பலன் கிடைத்தது.
ஆயினும் விசிறிய போது, முன்னுள்ள முறையில் கிடைக்கும் பலனை விடக் குறைவான பலனே அவதானிக்கப்பட்டது.
நாம் ஏற்கெனவே எமது CSJ Agri முகநூல் பக்கத்தில் சோளம் செய்கையில் பேவேரியாவை பயன்படுத்தி வெற்றிகரமாக செய்யப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் பற்றி முன்னர் பதிவிட்டுள்ளோம்.
தென்னை வண்டு கட்டுப்பாட்டில் பேவேரியா
வாகரை, கிராந்துரு கோட்டே மற்றும் மகா ஓயா பகுதியில் இரசாயன நஞ்சு பாவிக்கப்படாத தென்னை மரங்களில், குருத்து மூலம் இவற்றை செலுத்தி சிவப்பு மற்றும் காண்டாமிருக வண்டுகள் சிறப்பாக கட்டுப்பட்டமை தோட்ட உரிமையாளர்களால் பதியப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான சலாது இலை உற்பத்தியில் பேவேரியா
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நஞ்சற்ற இயற்கை மரக்கறிகளை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மாலைதீவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் தோட்டங்களில், பூச்சி மற்றும் வண்டுகளை அழிக்க பெவேரியா பயன்படுத்தப்படுகிறது. இங்கு விளையும் சலாது இலைகள் 99% வெற்றிகரமாக விளைவிக்கப்படுகின்றன.
தாழ் நாட்டு மரக்கறி மற்றும் கீரை உற்பத்தியில் பெவேரியா
நாடெங்கும் பரவலாக நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் பழஈயின் தாக்கம் நஞ்சு மற்றும் இரசாயனப் பசளை பிரயோகிக்கப்படாத சூழ்நிலையில் 14 நாட்களுக்கு ஒருமுறை விசிறப்பட்டபோது சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது.
கீரையை உண்ணும் வண்டுகள், 7 நாட்களுக்கு ஒருமுறை விசிறப்பட சிறப்பாக கட்டுக்குள் வந்தன.
வெண்டி காய் துளைப்பான், நஞ்சு மற்றும் இரசாயனப் பசளை பிரயோகிக்கப்படாத சூழ்நிலையில் 14 நாட்களுக்கு ஒருமுறை விசிறப்பட்டபோது சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது.
மிளகாய், வல்லாரையில் சாறு உறிஞ்சும் நுண் பூச்சி களையும் இவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தின. ஆயினும் வெர்ட்டிசீலியம் லக்கனி எனும் நுண்ணுயிர் கூட இவற்றுக்கு சிறந்த பலனைத் தரும்.
மாவுப்பூச்சி / அழுக்கணம் /Meelibugs இனை கட்டுப்படுத்தும் பேவேரியா
தென் மற்றும் வடமத்திய மாகாண ஏற்றுமதி மாம்பழ செய்கையில்
இவற்றின் கல்சியத்தாலான மேலுறையை சிதைக்க மதுசாரம் (Surgical Spirit) விசிறி, 24 மணி நேரத்தின் பின், 48 மணி நேரத்தின் முன் பேவேரியவை விசிறி மீண்டும் 7 நாட்கள் அதன் பின் 14 நாட்கள் இடைவெளியில் பிரயோகித்த போது கணிசமான பலன் கிடைத்தது.
இவை இயற்கை விவசாயத்தில் நஞ்சற்ற இயற்கை பீடை கொல்லியாக ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவை. மேலும் இந்திய சந்தைகளில் இவை பரவலாக, இலகுவாக கிடைப்பதுடன் அங்குள்ள இயற்கை விவசாயிகளால் சிறப்பான முறையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையிலும், அரசாங்கமானது இரசாயன நஞ்சு உற்பத்தி /இறக்குமதி செய்யும் வர்த்தக அழுத்தங்களுக்கு அடிபணியாது, இவற்றை மிக விரைவில் அங்கீகரிப்பதானது, நஞ்சற்ற விவசாயத்தினை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, நஞ்சு விவசாயத்துடன் சிறப்பான போட்டியை கொடுத்து, நஞ்சற்ற விளைபொருட்களின் விலையை குறைத்து, ஏழைகளுக்கும் நஞ்சற்ற உணவு சென்றடைய நிச்சயம் வழிசமைக்கும்.
source : CSJ Agri