குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோய் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. 2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில், ‘எம் – பாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் குரங்கம்மையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும், மேலும் உலகளவில் புழக்கத்தில் உள்ள புதிய வகையான வைரசுடன் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும். இது மிகவும் தீவிரமானதாக அறியப்படுகிறது.
இந்தியாவில் இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளன. மக்கள் பீதியடையத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.