வடக்கு தொடருந்து சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு Uncategorized

வடக்கு தொடருந்து சேவை தொடர்பிலான விசேட அறிவிப்பு

1 min read
💬 0

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு தொடருந்து மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்த, மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான தொடருந்து மார்க்க பகுதியில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.
குறித்த தொடருந்து மார்க்க பகுதியில், வழமையாக தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்கு காரணம் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 தொடருந்து கடவைகள் உள்ளதுடன், 15 தொடருந்து கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 09 தொடருந்து கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன.

பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள தொடருந்து கடவுப்பாதைகளில் தொடருந்து அந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கினால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய தொடருந்து கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி தொடருந்து சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.