Unlocking Export Potential A Program for Women Entrepreneurs in Batticaloa

ஏற்றுமதி திறனைத் திறத்தல் – மட்டக்களப்பு பெண் தொழில்முனைவோருக்கான ஒரு திட்டம்

இன்றைய உலகப் பொருளாதாரத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகின்றன. குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், பெண்களின் பொருளாதார மேம்பாடு என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாதது. இலங்கை புள்ளிவிவரத் திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டின் சராசரியை விட அதிகமாக உள்ளது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிபுரிந்து தாயகம் திரும்பிய பெண்களும், போரினால் பாதிக்கப்பட்ட ஏனைய பெண்களும் சிறு தொழில்களை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போராடி வருகின்றனர்.
எனது இருபது ஆண்டுகளுக்கும் மேலான அபிவிருத்திப் பொருளாதாரம் தொடர்பான அனுபவத்தில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளதன் மூலம், உள்ளூர் உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்துவதும், அவர்களை சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை நான் ஆழமாக உணர்ந்துள்ளேன். தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள், உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்றும் சிறுதொழில் உற்பத்தியாளர்களை ஏற்றுமதி சந்தைக்கு கொண்டு சென்றதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலக வங்கியின் 2020 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தாய்லாந்தின் “ஒரு கிராமம் ஒரு பொருள்” திட்டம், உள்ளூர் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் தனித்துவமான திறன்களையும், கலாச்சார பாரம்பரியம் மிக்க தயாரிப்புகளையும் கொண்டுள்ளனர். பனை ஓலைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் போன்ற அவர்களின் தயாரிப்புகள் தனித்துவமான அழகையும், கதையையும் கொண்டுள்ளன. இருப்பினும், சந்தைப்படுத்துதல், தரக்கட்டுப்பாடு, ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் சர்வதேச சந்தை தேவைகள் குறித்த போதிய அறிவு மற்றும் பயிற்சி இல்லாததால், அவர்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் உள்ளூர் சந்தையிலேயே தங்கள் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். UNDP இன் 2022 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று, இலங்கையில் உள்ள சிறுதொழில் முனைவோர்களில் பலர் ஏற்றுமதி சந்தைக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான அறிவும் திறனும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சவாலை எதிர்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 200 பெண் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை அவர்களின் தனித்துவமான பொருட்களை ஏற்றுமதி நிலைக்கு மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான பயிற்சித் திட்டத்தை முன்மொழிகிறேன். இதன் முக்கிய நோக்கம், இந்த பெண்களுக்கு ஏற்றுமதி சந்தையின் தேவைகள், தரக்கட்டுப்பாடு, பொதியிடல், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த விரிவான பயிற்சியை வழங்குவதன் மூலம், அவர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்த உதவுவதாகும். இதன் மூலம், அவர்களின் வருமானம் அதிகரிப்பதுடன், அப்பகுதி பெண்களின் பொருளாதார மேம்பாடும் உறுதி செய்யப்படும்.

இந்த இலக்கை அடைவதற்கான முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று, ஏற்றுமதி சந்தையில் அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது. இப்பயிற்சியில், சர்வதேச சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதிக்குத் தேவையான தரச்சான்றிதழ்கள், பொதியிடல் மற்றும் லேபிளிங் தரநிலைகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான சட்ட மற்றும் நிதி நடைமுறைகள் குறித்து விரிவாக கற்பிக்கப்படும். மேலும், வெற்றிகரமான ஏற்றுமதி தொழில் முனைவோர்களின் அனுபவப் பகிர்வு அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்படும்.

அடுத்ததாக, பயிற்சி பெறும் பெண்களின் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு உதவிகள் வழங்கப்படும். இதற்காக, உள்ளூர் மற்றும் சர்வதேச வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒத்துழைப்புடன், அவர்களின் தயாரிப்புகளுக்கு புதிய வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், அவர்களின் தயாரிப்புகளின் தரத்தை பரிசோதித்து சான்றிதழ் பெறுவதற்கான உதவிகளும் வழங்கப்படும்.

மேலும், இந்த பெண் தொழில் முனைவோர்களை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க வாய்ப்பளிப்பது, ஆன்லைன் வர்த்தக தளங்களில் அவர்களின் பொருட்களை காட்சிப்படுத்துவது மற்றும் சர்வதேச கொள்முதல் செய்பவர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கென்யாவில் உள்ள “மாமா ஆப்பிரிக்கா” என்ற அமைப்பு, உள்ளூர் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய உதவுகிறது. இது போன்ற வெற்றிகரமான மாதிரிகளை நாம் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் பலவாகும். முதலாவதாக, பயிற்சி பெற்ற 200 பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் தனித்துவமான பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யத் தொடங்குவார்கள். இது அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும். இரண்டாவதாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான தயாரிப்புகள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும். இது அப்பகுதியின் பொருளாதாரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்கும். மூன்றாவதாக, இந்த வெற்றி மற்ற பெண் தொழில் முனைவோர்களுக்கும் ஊக்கமளிக்கும். இதன் மூலம், இப்பகுதியில் மேலும் பல பெண்கள் தொழில் முனைவர்களாக உருவாகி, பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

இறுதியாக, இந்த முன்மொழிவு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான படியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சரியான பயிற்சி, சந்தை வாய்ப்புகள் மற்றும் ஆதரவு கிடைத்தால், இந்த பெண்கள் தங்கள் திறமையையும், கடின உழைப்பையும் கொண்டு சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக நுழைந்து, தங்கள் குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

S.தணிகசீலன்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்


Unlocking Export Potential – A Program for Women Entrepreneurs in Batticaloa

In today’s global economy, Micro, Small, and Medium Enterprises (MSMEs) are the backbone of economic growth and job creation. Especially in districts like Batticaloa, which are home to a high number of war-affected and female-headed households, the economic empowerment of women is not only about improving their livelihoods but is also crucial for the overall stability of the community. According to data from Sri Lanka’s Department of Census and Statistics in 2021, the number of female-headed households in the Batticaloa district is higher than the national average. Moreover, women returning from domestic work in Middle Eastern countries and others affected by the war are striving to improve their livelihoods by running small businesses.

With over two decades of experience in development economics, particularly through work with various United Nations organizations, I have deeply understood that enhancing the capacity of local producers and connecting them to international markets paves the way for sustainable economic development. Countries like Thailand and Vietnam have achieved significant economic growth by promoting local handicrafts and small-scale producers in export markets. According to the World Bank’s 2020 report, Thailand’s “One Tambon One Product” (OTOP) initiative played a major role in increasing local producers’ incomes and strengthening the rural economy.

Women entrepreneurs from the Batticaloa district possess unique skills and create culturally rich products. Their products, such as palm leaf items, handloom textiles, food products, and other local handicrafts, carry a distinct beauty and story. However, due to limited knowledge and training in areas like marketing, quality control, export procedures, and international market requirements, these women struggle to take their products to global markets. As a result, they are often forced to sell their goods at lower prices in the local market. A 2022 study by the UNDP highlights that many small-scale entrepreneurs in Sri Lanka lack the necessary knowledge and skills for export-oriented product development and marketing.

To address this challenge, I propose a comprehensive training program for 200 female MSME entrepreneurs from the Batticaloa district to upgrade their unique products to export standards. The primary goal is to provide these women with extensive training on export market requirements, quality control, packaging, marketing strategies, and export procedures—thereby enabling them to successfully enter international markets. This will not only increase their income but also ensure the economic upliftment of women in the region.

A key proposed intervention is to conduct training workshops facilitated by experts experienced in export markets. These workshops will cover international market opportunities, required export certifications, packaging and labeling standards, digital marketing strategies, and legal and financial procedures related to exports. Additionally, sessions will be held to allow successful export entrepreneurs to share their experiences.

Next, technical and design support will be provided to help participants upgrade and enhance their products to meet international standards. In collaboration with local and international designers and technical experts, advice will be given on modern designs and technologies for their products. Assistance will also be provided to obtain certification for quality standards.

Furthermore, efforts will be made to connect these women entrepreneurs to international markets. This will include participation in international trade fairs, showcasing their products on online trade platforms, and facilitating direct engagement with international buyers. We can draw inspiration from successful models like “Mama Africa” in Kenya, which helps local artisans sell their crafts in international markets.

The expected outcomes of this initiative are multifold. First, the 200 trained women entrepreneurs will begin selling their unique products in international markets, significantly increasing their income. Second, Batticaloa’s distinct products will gain recognition on the global stage, adding value to the region’s economy and cultural identity. Third, the success of this initiative will inspire other women entrepreneurs, encouraging more women in the region to become active contributors to economic development.

In conclusion, this proposal will serve as a vital step toward the economic empowerment of women in the Batticaloa district who have been affected by war and natural disasters. With the right training, market access, and support, these women can leverage their talent and hard work to succeed in international markets—creating a brighter future for their families and communities.

S.Thanigaseelan

For more details Maatram News