அமெரிக்க புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத் தலைவர் VCOT வளாகங்களுக்கு கள விஜயம்
மனிதநேயம் நிதியத்தின் (Manitha Neyam Trust) ஏற்பாட்டில், அமெரிக்காவின் புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத் தலைவரும் வலையமைப்புப் பொறியியலாளருமான திரு. ஸ்ரீகணேசன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VCOT) வளாகங்களுக்குக் கள விஜயம் மேற்கொண்டு, கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, கொம்மாதுரை வளாகத்தில் பயிற்றுநர்கள் மற்றும் பயிலுனர்களுடன் கலந்துரையாடிய அவர், கணினி ஆய்வுகூடத்தின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், கணினிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், ஆய்வுகூடத்தின் LAN வலையமைப்பை நவீனப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களைப் புளோரிடாவிலிருந்து அனுப்பி வைப்பதற்கும் உறுதியளித்தார்.
தொடர்ந்து, கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரிக்குச் விஜயம் செய்த அவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Cake Making Course பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை விரைவாக வழங்குவதாகத் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பிரதான வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், மனிதநேயம் நிதியத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் ‘Career-FIT & IT’ செயற்திட்டத்தைப் பாராட்டிய அவர், இத்திட்டத்தை மலையகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதில் ஆர்வம் தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவர்களில் சிலருக்குத் தனது சொந்த நிதியில் புலமைப்பரிசில் வழங்க விருப்பம் தெரிவித்ததுடன், அமெரிக்கா திரும்பியதும் புளோரிடா இலங்கைத் தமிழ் மன்றத்தின் ஊடாக VCOT இன் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுச் செயற்பாடுகளுக்குப் புலம்பெயர் சமூகத்தின் நீண்டகால ஆதரவை ஒருங்கிணைத்துத் தருவதாகவும் உறுதியளித்தார்.



