மாணவர்களுக்கு இலவச அடிப்படைக் கணினி பயிற்சி வழங்கல்
இன்றைய டிஜிட்டல் உலகில், பாடசாலை மாணவர்கள் சிறு வயதிலிருந்தே அடிப்படைக் கணினி அறிவைப் பெற்றிருப்பது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இதனை உணர்ந்த விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, பின்தங்கிய மற்றும் தேவைப்பாடுடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு கணினி அறிவை வழங்கும் நோக்கில் பல்வேறு கல்விசார் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடனும், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடனும், பின்தங்கிய பிரதேசங்களில் சமுதாயக் கல்லூரிகள் மற்றும் கணினிக் கற்றல் நிலையங்களை நிறுவி, மாணவர்களுக்கு இலவச அடிப்படைக் கணினி பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெருகல் துவாரகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கணினி வகுப்புகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டனர்.



இதன்போது, தரம் 9 மற்றும் தரம் 10 மாணவர்களைச் சேர்ந்த 32 பேர் மதிப்பீட்டில் பங்கேற்று, தாங்கள் கற்றுக்கொண்ட அடிப்படைக் கணினி அறிவையும் நடைமுறைத் திறன்களையும் வெளிப்படுத்தினர்.
கணினி வசதிகள் மிகக் குறைவாகக் காணப்படும் சமூகத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள், கணினிக் கல்வியில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, தங்களது கல்விப் பயணத்தை மேலும் முன்னேற்றுவதற்காக கூடுதல் கணினி வசதிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு தரமான டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ச்சியாக பல்வேறு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.


