புதுக்குடியிருப்பு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் நவராத்திரி விழா
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் நவராத்திரி விழா 19.10.2026 அன்று நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிள்ளைகளுக்காக மாலை கட்டுதல், கோலம் போடுதல் உள்ளிட்ட பண்பாட்டு செயற்பாடுகள் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிள்ளைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தினர்.
விழா நிலையத்தின் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற பூஜையுடன் ஆரம்பமாகி, சாரதாம்மா கோவிலில் நடைபெற்ற பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, பிள்ளைகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் மற்றும் நிலையத்திற்கு அதிக நாட்கள் வருகை தந்தவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதனையடுத்து, பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
மேலும், விஜயதசமி தினமான 20.10.2026 அன்று நிலையத்தின் நீண்டகாலப் பயன் தரும் மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று நடப்பட்டது. அத்துடன், குறுங்காலப் பயிர்ச்செய்கையின் ஒரு பகுதியாகக் கத்தரிக்காய் அறுவடையும் இடம்பெற்றது.











