வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ‘AI for Office Productivity’ பயிற்சி செயலமர்வு
போரதீவுபற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் ‘AI for Office Productivity’ என்ற தலைப்பிலான செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி செயலமர்வு 17.08.2026 அன்று நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட இச்செயலமர்வில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 100 உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பயிற்சியின் போது, செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது ஆவண தயாரிப்பு, தொழில்முறை மின்னஞ்சல் மேலாண்மை, அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் தயாரித்தல், தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விளக்கக்காட்சி (Presentation) தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அலுவலகப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இச்செயலமர்வில் வளவாளராக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் திரு. R. Joel அவர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார். இதன்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தற்போதைய பயன்பாடுகள் மற்றும் எதிர்கால அலுவலகச் சூழலில் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப அலுவலகப் பணிகளை நவீனமயப்படுத்தி, உத்தியோகத்தர்களின் உற்பத்தித்திறன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இவ்வாறான AI திறன் மேம்பாட்டு செயலமர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.