கரடியனாறு சமுதாயக்கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் விழா
14.08.2026 அன்று காலை 9.30 மணிக்கு, கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் விழா 2026 சிறப்பாக நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி. கங்கேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தனது உரையில், சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுடன் மிகவும் நெருக்கமானவராகவும், இளைஞர்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய திருமதி. சிவசங்கரி. கங்கேஸ்வரன், இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்களை வலுப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளையும் சமூக நோக்கையும் நடைமுறைப்படுத்தும் பணியாக அமைவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நிகழ்வில் மூன்று பயிலுனர்கள் தங்களது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமை தொடர்பில் பாராட்டு தெரிவித்த அவர், அவர்கள் தங்களது அனுபவங்களை மிகவும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்தியமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
மாணவர்களுக்காக பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் முன்வந்து செயற்படுவதும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கல்வி அதிகாரிகளை அணுகுவதும் ஒரு நேர்மறையான சமூக மாற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தொலைதூரப் பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மூன்று மாத பயிற்சியில் பங்கேற்று அதனை சிறப்பாக நிறைவு செய்துள்ளமை பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த அவர், இந்தப் பயிற்சி அவர்களின் வாழ்க்கையின் முடிவல்ல; மாறாக புதிய பாதைக்கான ஆரம்பம் எனவும் சுட்டிக்காட்டினார். பயிற்சியை நிறைவு செய்த பின்னரும் அடுத்த கட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் பயிலுனர்களை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் கணினி அறிவு, ஆங்கில அறிவு மற்றும் வாழ்க்கைத்திறன்கள் இளைஞர்களுக்கு அவசியமானவை எனவும், இப்பயிற்சியின் மூலம் வழங்கப்பட்ட அறிவை அடுத்த கட்டத்தில் மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



மேலும், பயிலுனர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு சமூகத்தில் கௌரவமான தொழிலை மேற்கொள்ளும் நிலையை அடைய வேண்டும் என்றும், அது சுயதொழிலாகவோ அரச அல்லது தனியார் துறையில் கிடைக்கும் தொழிலாகவோ இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்களுக்குள் காணப்படும் ஆற்றல்களை சரியான வாய்ப்புகள் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பயிற்சியை நிறைவு செய்த பின்னர் வீட்டில் தங்கிவிடாமல், அடுத்த கட்ட கல்வி மற்றும் பயிற்சிகளைத் தேடி முன்னேற வேண்டும் எனவும், தங்களது சமூகத்துடன் இணைந்து எதிர்கால இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



இதேவேளை, சுவாமி விவேகானந்தரின் அறப்பணியை தொடர்ந்து முன்னெடுத்து வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மாணவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வலயக் கல்வி அலுவலகத்தின் ஊடாக வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கான தேவைகள் தொடர்பில் தயங்காமல் வலயக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.
இதன்போது, பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருமதி. சிவசங்கரி. கங்கேஸ்வரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், இக்கௌரவிப்பு நிகழ்வில் திரு. க. பிரதீஸ்வரன், திரு. த. சந்திரசேகரம் மற்றும் திருமதி. கரிகரன் கிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், BT/BW/Karadiyanaru Maha Vidyalayam அதிபர் Mrs. Akila Nirojini Thiyagarajan மற்றும் BT/BW/Karadiyanaru Hindu Vidyalayam அதிபர் Mr. Uthayachanthiran ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் திரு. த. சந்திரசேகரம், விவேகானந்த சமுதாயக் கல்லூரியின் ஆலோசகர் திரு. அருள்நிதி, கரடியனாறு சனசமூக அமைப்பின் தலைவர் திரு. காந்திநாதன், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திருமதி. கரிகரன் கிந்துஜா, பயிற்சி முகாமையாளர் திரு. சா. கிறேசியன் மற்றும் நிலைய பொறுப்பாளர் திருமதி. தனுசிகா வினோஜன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.



மூன்று மாத பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களின் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் இடம்பெற்றதுடன், அவர்களின் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பயிலுனர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்ததுடன், அவர்கள் அடுத்த கட்ட கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை நோக்கி முன்னேறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கியது.







மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.