வட்ஸ்அப் கொண்டுவரும் அட்டகாசமான அப்டேட்
WhatsApp செயலியில் பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப்புவதற்கான ‘Scheduled Messages’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரையான காலப்பகுதிக்கு முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும்.
தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் என இரண்டிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
செய்தியைத் தட்டச்சு செய்த பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்து, விரும்பிய திகதி மற்றும் நேரத்தைத் தெரிவுசெய்து அனுப்புவதற்குத் திட்டமிடலாம்.
மேலும், திட்டமிடப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் பார்வையிடவும், தேவையெனில் நீக்கவும் முடியும்.
குறிப்பிடத்தக்க வகையில், தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மின்கலச் சக்தி இல்லாத நிலையிலும் திட்டமிடப்பட்ட நேரத்தில் செய்திகள் தானாகவே அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வசதி உலகளாவிய ரீதியில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




