மாவிலங்கத்துறை கிராமத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை கண்காணித்தல்
கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை விவேகானந்த சமுதாய அறக்கட்டளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில், மாதிரி கிராமமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாவிலங்கத்துறை கிராமத்தில் கடந்த நான்கு வருடங்களாக, அப்பகுதி மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூக மற்றும் கல்விசார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை கிராமம், மாவிலங்கத்துறை சித்தி விநாயகர் ஆலயத்தை ஆதிக்கடவுளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. மன்முனைப்பற்று, பற்றிமாபுரம் மற்றும் மாவிலங்கத்துறை ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இக்கிராமத்தில் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 2 முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாடசாலை நேரம் நிறைவடைந்த பின்னர் ஆங்கிலம் மற்றும் சிங்கள பாடங்களுக்கான மாலை நேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வகுப்புகளின் ஊடாக மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்துவதுடன், அவர்களின் கல்வி அடைவுகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செயற்பாடுகளின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தின் போது, ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி வகுப்புகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து, அவர்களது கல்வி முன்னேற்றம் மற்றும் கற்றல் அனுபவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான பின்னூட்டங்கள் பெறப்பட்டதுடன், அவர்களது புள்ளிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மற்றும் கல்வி அடைவுகளில் காணப்படும் முன்னேற்றம் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கான மேலதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்த நிலையை அடைய வழிகாட்டுவதே இத்தகைய செயற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த நான்கு வருடங்களாக மாவிலங்கத்துறை கிராமத்தில் தேவைக்கேற்ப முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்பாடுகள், கல்வி வாய்ப்புகளில் காணப்படும் இடைவெளியைக் குறைத்து, கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்களித்து வருகின்றன.



பின்தங்கிய கிராமப்புற மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டல் ஊடாக அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.





