CareerFit & IT பாடநெறி பயிலுனர்களின் இறுதி அறிக்கை சமர்ப்பித்தல் நிகழ்வு
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் CareerFit & IT பாடநெறியின் பயிலுனர்களுக்கான இறுதி அறிக்கை சமர்ப்பித்தல் நிகழ்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களை இலக்காகக் கொண்டு மூன்று மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட CareerFit & IT பாடநெறியில், அடிப்படை ஆங்கிலம், அடிப்படைக் கணினி அறிவு, வாழ்வியல் திறன் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
இப்பாடநெறியின் இறுதி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக 22 பயிலுனர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஏனைய கல்வி நிலையங்களுக்கு களவிஜயங்களை மேற்கொண்டனர். இதன்போது குறித்த கல்வி நிலையங்களில் நடைபெறும் பயிற்சி நெறிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிக்கைகளைத் தயாரித்தனர்.



அதனைத் தொடர்ந்து, பயிலுனர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவர்கள் மேற்கொண்ட களவிஜயத்தின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களும் நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது பயிலுனர்களின் அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் களவிஜயம் தொடர்பான அனுபவப் பகிர்வைத் தொடர்ந்து, அவர்களுக்கான பின்னூட்டல்களும் வழங்கப்பட்டன.



பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்து வெளியுலகில் கால்பதிக்கத் தயாராகும் மாணவர்களுக்கும், பாடசாலையை விட்டு இடைவிலகியிருந்த போதிலும் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் CareerFit & IT பாடநெறி சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்பாடநெறியின் ஊடாக பயிலுனர்கள் கல்வி அறிவைப் பெற்றுக்கொள்வதுடன், களவிஜயங்கள் மற்றும் குழுச் செயற்பாடுகள் மூலம் குழுவாகச் செயற்படும் திறன், சபைக்கூச்சத்தை குறைத்தல், முன்வந்து பேசுதல் மற்றும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல் போன்ற முக்கியமான வாழ்வியல் மற்றும் தொடர்பாடல் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மேலும், பயிற்சியில் இணைவதற்கு முன்னர் அடிப்படைக் கணினி அறிவு கூட இல்லாதிருந்த நிலையில், தற்போது சுயமாக கணினியை கையாளக்கூடிய நிலைக்கு தாம் முன்னேறியுள்ளதாக பயிலுனர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், பயிற்சியின் ஊடாக ஆங்கில அறிவு மற்றும் AI தொழில்நுட்பத்தை கற்றல் நடவடிக்கைகளுடன் இணைத்துப் பயன்படுத்துவதும் இலகுவாகியுள்ளதாக பயிலுனர்களின் பின்னூட்டல்கள் அமைந்திருந்தன.
தொழில் உலகில் கால்பதிக்கத் தேவையான அடிப்படை அறிவு, தொழில்நுட்பத் திறன், ஆங்கில அறிவு, வாழ்வியல் திறன்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கும் வகையில் CareerFit & IT பாடநெறி அமைந்துள்ளதுடன், இளைஞர்களை எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு தயார்படுத்துவதில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.





